இந்தூர் – பாட்னா விரைவு ரயில் விபத்தில் 125 பேர் பலி: சுரேஷ் பிரபு நேரில் ஆய்வு

பாட்னா: உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் அருகே இந்தூர் – பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்துள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மத்தியபிரதேச மாநிலம் பாட்னா இடையே செல்லும் 22 பெட்டிகள் கொண்ட இந்தூர் – பாட்னா விரைவு ரயில் நேற்று மதியம் 2 மணிக்கு இந்தூரில் இருந்து புறப்பட்டது. போபால், ஜான்சி, கான்பூர், லக்னோ, வாரணாசி வழியாக பாட்னா செல்லக்கூடிய இந்த ரயில், இன்று அதிகாலை 3 மணி அளவில் ரயில் கான்பூரை அடுத்த புர்கராயம் என்ற இடத்தில் திடீரென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயில் அப்போது வேகமாக சென்று கொண்டு இருந்ததால் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. இதில் ரயிலின்
14 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் ‘எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4’ பெட்டி மிக மோசமான அளவுக்கு சேதம் அடைந்தது. அந்தப் பெட்டியில் இருந்த பலர் உயிரிழந்தனர்.
இதுவரை 125 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 250 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலத்த காயமடைந்துள்ள 76 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து ரயில்வே மீட்பு குழுவினர், போலீஸார் மற்றும் தீயமணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமின்றி மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மீட்பு பணியை துரிதப்படுத்துமாறு மாநில போலீஸ் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ்கள் இடையூறு இன்றி வந்து செல்லவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி தருமாறும் போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தில் மாநில சுகாதாரத்துறை இயக்குநர், சட்டம் ஒழுங்கு போலீஸ் கூடுதல் டிஜிபி மற்றும் ரயில்வே உயர் அகாரிகள் முகாமிட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு கீழ் 250 போலீஸ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் விபத்து குறித்து தகவல் அறிய இந்தூர், உஜ்ஜைன், ரத்லம், ஓராய், ஜான்ஷி, பொக்ரயான் ஆகிய ரயில் நிலையங்களில் தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நரேந்திர பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசியதாகவும், மீட்புப் பணிகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விபத்து நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையை அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே உயரதிகாரிகளும் அப்பகுதியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களும் மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறார்கள் என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மாலை 7.30 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
120 பேரை பலி கொண்ட இந்த ரயில் விபத்து நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

0
%d bloggers like this: