ரூ. 500, 1000 செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 7வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக் சபா, ராஜ்ய சபா ஆகிய இரண்டு அவைகளும் 7வது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்று முதல் எதிர்கட்சிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜக அரசு பதில் எதுவும் கூறவில்லை. மேலும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் வழக்கம் போல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. அப்போது, எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும், சபாநாயகர் இருக்கையின் அருகில் வந்து கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சபாநாயகர் லோக் சபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய 7 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடங்கியுள்ளனர்.
இதே போன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: