பணநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது : கருணாநிதி

சென்னை : நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, பணநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.பணநாயகம் வென்றுள்ளது இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு. கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை.

நாளை விளையும் நன்மையை விட, இன்று கைக்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணிக் களிப்புறும் போக்கு, ஆக்க பூர்வமான எதிர் காலத்திற்கு அடிப்படையாகாது என்பதை அனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறேன். பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது; அதுவே இந்த இடைத்தேர்தல்! செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது என தெரிவித்துள்ளார்.பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அஞ்சலி பழம்பெரும் கர்நாடக இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் சில நாட்கள் உடல் நலக் குறைவாக இருந்து, நேற்று மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். தன்னுடைய மிக இளம் வயதிலேயே சிறந்த இசைவாணராகப் பெயர் பெற்று, தமிழகத்திலும், ஆந்திர மாநிலத்திலும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான கச்சேரிகளில் பங்கு பெற்று தனக்கெனத் தனிப் புகழ் நாட்டியவர்.

திரை உலகத்திலும் இசைத் துறையில் பங்கேற்று வெற்றிக் கொடி ஏற்றியிருக்கிறார். கழக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக நான் இயற்றிய இசைப் பாடலின் சில வரிகளை அவர் பாடியது இன்னும் எனது செவிகளில் தவழ்ந்து கொண்டுள்ளது. மத்திய அரசின் “பத்மவிபூஷன்” விருது, சென்னை மியூசிக் அகாடமியின் “சங்கீத கலாநிதி” விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார். அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குறிப்பாக இசை உலகத்தினருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

108
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: