நடிகர் சங்க ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டனர்! – சரத்குமார்

சென்னை: நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை புதிய நிர்வாகிகள் சீர்குலைத்து விட்டனர் என்று நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘ நன்றாக நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும். ஆனால் அப்படி நடப்பது போலத் தெரியவில்லை.
முதலில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடக்கும் என்றார்கள். பின்னர் நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றினார்கள். இந்த இடமாற்றம் காரணமாக பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
எனக்கு இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் எந்த ஆர்வமும் இல்லை.
என்னைப் பற்றி ஊழல் புகார் கூறுகிறார்கள். முதலில் ஒரு தொகையை ஊழல் செய்துவிட்டதாகக் கூறினர். பின்னர் இன்னொரு தொகையைச் சொன்னார்கள். இப்போது ஒரு தொகையைச் சொல்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது. என் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே புதிது புதிதாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னை நீக்கிவிட்டதாக தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். அதைச் சட்டப்படி சந்திப்பேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.
50, 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள்.
நடிகர் சங்கத்தில் மோதல், அடிதடி, தகராறு என்று கேள்விப்பட்டேன். எனது மனைவி மூலம்தான் இந்தப் பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டேன்.
நடிகர் சங்கம் என்றால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நான் தலைவராக இருந்தபோது இது போன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. நல்லது நடப்பதற்காக இயங்க வேண்டிய நடிகர் சங்கத்தில் பிளவும், மோதலும் ஏற்படுவது வேதனை. நடிகர் சங்க ஒற்றுமையை இந்த புதிய நிர்வாகம் சீர்குலைத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை,’ என்றார்.

Leave a Reply

%d bloggers like this: