நடிகர் சங்கத்தில் பிளவு எடுத்த முயலும் சுயநல கிருமிகள்… சிண்டு முடிபவர்களை பற்றி பயமில்லை இளம் நிர்வாகிகள் உற்சாகம்

சென்னை:மாற்றம்… மாற்றம்… இது நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட குரல்…. அதுவும் ஒருங்கே இளைஞர் படை இணைந்து எழுப்பிய உச்சக்குரல்… நிர்வாகிகளிடம் கணக்கு கேட்ட விவகாரத்தில் பற்றிய சிறு தீப்பொறி பெரிய எரிமலைக்குழம்பாகி… புத்தம் புதிய மாற்றத்தை ஏற்பட செய்தது. இப்போது அந்த நடிகர் சங்கத்திற்கு போட்டி சங்கம் வைக்க ஏற்பாடு நடக்கிறதாம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்த கடன்களை அடைக்க அப்போதைய தலைவராக இருந்த விஜயகாந்த் பெரும் முயற்சி எடுத்தார். இதற்காக வெளிநாடுகளில் கலைவிழா நடத்தப்பட்டது. அனைத்து நடிகர்களும் ஒற்றுமையுடன் கூடி இதனை சக்ஸஸ் செய்தனர்.

நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்தின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.
அரசியல் கட்சியை ஆரம்பித்ததால் அவர் நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக… அங்கு வந்து நின்றார் நடிகர் சரத்குமார். அவருடன் நிர்வாகி ஆனார் ராதாரவி. இவர்களின் கூட்டணியில் நடிகர் சங்க கட்டிடம் லீசுக்கு விடப்பட்டதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரம் எழுப்பியது.

நடிகர் சங்க பொதுக்குழு உட்பட சங்க கூட்டம் நடத்தப்படுவதில்லை. அப்படியே நடந்தாலும் அது முழுமையான கூட்டம் இல்லை. பிரச்னைகள் குறித்து பேச எவ்வித வாய்ப்பும் கிடைப்பதில்லை என்ற இளம் நடிகர்களின் குரலுக்கு சரத்குமார் கூட்டணி செவி சாய்க்கவில்லை. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த இளம் நடிகர்கள் சங்க கட்டிடப்பிரச்னையை கையில் எடுத்தனர்.

அவ்வளவுதான் இளம் நடிகர்கள் மீது செம பாய்ச்சல் காட்டினர் நிர்வாகிகள்… நடத்து தேர்தலை நடத்து என்று குரல் ஓங்கி ஒலித்தது. இப்பிரச்னை கோர்ட் வரை சென்றது. பின்னர் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தலை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் அரங்கேறின. பாண்டவர் அணி என்ற பெயரில் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் அடங்கிய “டீம்” தலைவராக மூத்த நடிகர் நாசரை முன்மொழிய இந்த பாண்டவர் அணி பிரசாரத்தில் குதித்து அனைத்து நடிகர், நாடக நடிகர்களை சந்தித்தது.

பாண்டவர் அணியில் இருந்த இளம் நடிகர்களால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம் பேர் என்றுதான் சொல்லவேண்டும். இங்குதான் மாற்றத்திற்காக ஆணி வேர் அழுத்தமாக ஊன்றப்பட்டது. தொடர்ந்து தேர்தலின் போது பல பிரச்னைகள் எழுந்தாலும் பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள் அமோக வெற்றி பெற்றனர். அவர்களின் கூட்டணியை சேர்ந்த அனைவரும் நிர்வாகிகள் ஆனார்கள். ஒரு மாற்றம்… உருமாற்றம் அடைந்தது.

மூத்த நடிகர் நாசர் தலைமையில் சங்கத்தினை கைப்பற்றி பாண்டவர் அணி சொன்னதை செய்ய ஆரம்பித்தனர். வெற்றிப் பெற்ற உடனேயே சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்க பழைய நிர்வாகிகளுக்கு ஓலை அனுப்பப்பட்டது. நடிகர் சங்கத்தின் செயற்குழுவும் கூட்டப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் சங்க செயலாளர் விஷால் நிருபர்களிடம் பேசுகையில், இதை சந்தோஷமான நிகழ்வாக நினைக்கிறோம். எங்களின் சங்க நிர்வாக பணிகளை துவங்குகிறோம். தேர்தலின் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நிர்வாக பணிகள் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்க… அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட உள்ளோம்.

இனி பாண்டவர் அணி என்ற பெயருடன் செயல்பட மாட்டோம். அது தேர்தலுக்காக உருவான அணி. இனி நடிகர் சங்கம் என்றே செயல்படுவோம். இனி எஸ்.பி.ஐ., சினிமாஸ் உடனான பேச்சுவார்த்தை, சங்க கட்டிடம் ஆகிய பிரச்னைகளை முதல் பணியாக எடுத்து செயல்பட உள்ளோம் என்று அறிவித்தார். அதன்படியே உறுப்பினர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி வசூலை அள்ளி நடிகர் சங்க கட்டிட பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.

இந்நிலையில்தான் தற்போது பெரும் புகைச்சல் எழுந்துள்ளது. முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் புகைந்து கொண்டிருந்த பிரச்னையில் சிலர் நெருப்பை அள்ளிக் கொட்டி எரிய விட்டுள்ளனராம். தொடர்ந்து சங்கத்தில் பிளவை ஏற்படுத்தி குளிர் காய சிலர் நினைப்பதாக தெரிய வந்துள்ளது.

சரத்குமார், ராதாரவிக்கு ஆதரவாக இருக்கும் நடிகர்கள் இணைந்து புதிய நடிகர் சங்கத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தற்போது பூதாகரமாகியுள்ள நடிகர் சங்க பிரச்னைகளை சுமூக பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் தலையிடுவார்களா என்பதுதான் இமாலய கேள்வியா உள்ளது. கமல்ஹாசன் பகிரங்கமாக விஷால் தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னத்தான் நடக்கும் பார்ப்போமே என்று ஒரு தரப்பினர் காத்திருக்க… நல்லது செய்கிறோம்… அதனால் எங்களுக்கு பயம் இல்லை…. என்று விஷால் தரப்பினர் உற்சாகமாக சங்க பணிகளை மேற்கொண்டுள்ளனராம்.

Leave a Reply

%d bloggers like this: