கொலம்பியாவில் நொறுங்கிய விமானத்திலிருந்து 6 பேர் மட்டுமே உயிரோடு மீட்பு! 75 பேர் பலி?

ரியோநெக்ரோ: பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டின் சபெகோன்சே உள்ளூர் கிளப் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேர் இன்று பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர்.
அவர்கள் பயணித்தது, வெனிசுலா நாட்டின், லாமியா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமாகும். 72 பயணிகளை தவிர 9 விமான ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணித்தனர். ஆக, மொத்தம் 81 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கொலம்பிய நேரப்படி இரவு 10.15 மணியளவில் அந்த நாட்டு வான் எல்லையில் வைத்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது.
சம்பவ இடத்திலிருந்து 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
விமானம், அப்பளம் போல நொறுங்கிய படமும் கொலம்பிய நாட்டு ஊடகங்களில் வெளியானது. அதை பார்க்கும்போது விபத்தின் கோரம் தெரிந்தது. கொலம்பிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இதுவரை 6 பேரை மட்டுமே உயிரோடு காப்பாற்ற முடிந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, விமானத்தில் பயணித்த பிறர் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
விமான விபத்து நடந்த இடத்திற்கு சாலை மார்க்கமாகவே மீட்பு வாகனங்கள் செல்ல முடிகிறது. மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர், விமானங்கள் மூலமாக மீட்பு குழுவினரால் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ்கள் மூலமாகவே, காயமடைந்தோர், அருகேயுள்ள நகரங்களில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மெடலின் நகர மேயர் கூறுகையில், நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும், அவசர நிலையை எதிர்கொள்ள ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன என்றும், பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
கோபா சுடமெரிகானா தொடரில், கொலம்பியாவின் அட்லெடிகோ அணியை எதிர்த்து அந்த நாட்டு நேரப்படி நாளை மாலை 6.45 மணிக்கு போட்டி தொடங்கவிருந்தது. அதில் ஆடுவதற்காக பிரேசிலின் கிளப் அணியான சபெகோன்சே வீரர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related videos

Leave a Reply

%d bloggers like this: