கேள்வி கேட்காமல் சொல்வதை செய்.. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி தர்பார்!

டெல்லி: மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை கேட்டே அரசு செயல்பட வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள், தன்னிச்சையாகவே உள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு மட்டுமல்ல, அவரது சமீபத்திய நடவடிக்கைகளை கவனித்து பார்த்தால், ‘இந்தியாவுக்கு ஒரு சர்வாதிகாரிதான் வேண்டும்’ என டீக்கடைகளில் அடிபடும் வசனங்களுக்கு, உயிர் கொடுப்பவரை போலவே தென்படுகிறார்.
மோடியின் செயல்பாடு ஆரம்பம் முதலே தன்னிச்சையானதுதான். அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதே கிடையாது. இந்த வகையில் அவர் இன்னொரு ஜெயலலிதா.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஜனநாயகத்தில் ஒரு கடமை என்ற வாதத்தை நிராகரித்தவர் மோடி.
அவர் முழுக்க நம்பியது, காங்கிரசின் தோல்வியையும், சமூக தள பிரசாரங்களையும், தனது மேடை பிரசாரத்தையும்தான்.
Source: tamil.oneindia.com
ஒரு வழிப்பாதை உரை
பிரதமரான பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்றபோதிலும், ‘மன் கி பாத்’ என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றும், நடைமுறையை கொண்டுவந்தார். அதாவது, எனது பேச்சு ஒரு வழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, இடைமறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற தோரணையை காப்பாற்ற ரேடியோ உரை உதவியது.

கேள்வி கிடையாது
இதேபோலத்தான், ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பின்போதும், டிவி சேனல் வழியாக உரையாற்றிவிட்டு சட்டென அடுத்த ஃபிளைட்டை பிடித்து ஜப்பான் சென்றார் மோடி. எதிர்த்து கேள்வி கேட்க எந்த சேனல்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜப்பானில் நின்றபடி கருப்பு பண ஒழிப்பு குறித்து உரையாற்றினார் மோடி.

முக்கிய முடிவுகள்
மீண்டும் கோவா வந்து ஒரு விழாவில் பங்கேற்றபோது மேடையில் உணர்ச்சிகரமாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார். அப்போதும் யாருக்கும் கேள்வி கேட்க, வாய்ப்பு தரப்படவில்லை. மிக முக்கியமான முடிவுகளின்போது கூட மோடியின் செயல்பாடு இப்படி தன்னிச்சையான அறிவிப்புகளாகவே இருந்தன.

காவிரி கலாட்டா
மோடியின் செயல்பாடு பளிச்சென மக்கள் கண்களுக்கு தெரிந்தது காவிரி பிரச்சினையின்போதுதான். இரு மாநிலங்களும் பற்றி எரிந்தபோது கூட, கர்நாடக அனைத்து கட்சி குழுவை சந்திக்க மறுத்துவிட்டார் மோடி. அடுத்ததாக அதிமுக எம்பிக்கள் ஊர்வலமாக சென்று மோடியை சந்திக்க முயன்றபோதும், வாசலிலேயே காவலர்களால் தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். பெங்களூரில் கலவரம் வெடித்தபோது, கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என டிவிட்டர் வழியாகத்தான் வேண்டுகோள் விடுத்தார்.

கேரளாவுக்கும் அதே கதி
இப்போது, பண பிரச்சினை உச்சத்தில் இருக்கும் நிலையில், ரூபாய் நோட்டு செல்லாது பிரச்சினை தொடர்பாக மாற்று ஏற்பாடு செய்யும்படி கேரள அனைத்துகட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க இன்று தேதி ஒதுக்கும்படியும் பிரதமர் அலுவலகத்திற்கு கேரள அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேரள அனைத்து கட்சி குழுவை பிரதமர் சந்திக்க தேதி ஒதுக்கப்படவில்லை. கேரள அனைத்து கட்சி குழுவை பிரதமர் சந்திக்க மறுத்ததற்கு முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும் கிடையாது
இதுவாவது பரவாயில்லை. ஜனநாயகத்தின் உட்சபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்திலாவது எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு மோடி பதிலளிப்பாரா என்று பார்த்தால், அங்கும் கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்க்கிறார் மோடி. ஜனநாயகத்தில் எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். அப்படி நடந்தால்தான் அங்கு ஜனநாயகம் உள்ளது என்பது பொருள். அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்தையும் கேட்க வேண்டியதுதான் பிரதமர் அல்லது முதல்வரின் பணி. இதை மறுப்பது ஜனநாயகத்திற்கே எதிரானது என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாகவும் உள்ளது.

120
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: