உலகின் டாப் 5 திகில் கிளப்பும் தீவுகள் !

ஒரு நொடி கண்ணை மூடுங்கள். ஒரு தீவு… அங்கு யாருமே இல்லை… நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள். கொஞ்ச தூரம் நடக்கிறீர்கள். சில பாழடைந்த வீடுகள்… மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஓர் அமானுஷ்யம்… இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?. கதையல்ல… நிஜம். அப்படி உலகின் திகில் கிளப்பும் தீவுகள் குறித்த வரலாறு இது…
கிளிப்பர்டன் தீவு (Clipperton Island) :
1914-ம் ஆண்டு… மெக்சிகோவின் தென் – மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தத் தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாதுகாக்க 100 பேரை குடியமர்த்துகிறார், அன்றைய மெக்சிகோ அதிபர். ஒரு கலங்கரை விளக்கத்தையும் அமைக்கிறார்.
இவர்களுக்கான உணவுகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது.
திடீரென மெக்சிகோவில் உள்நாட்டு கலவரம் வெடிக்க, இந்தத் தீவையும், இந்த 100 பேரையும் மறந்து போயினர். உண்ண உணவில்லாமல் போராடி, ஒவ்வொருத்தராக செத்து மடிய ஆரம்பித்தனர். கடைசியாக லைட் ஹவுஸ் வாட்ச்மேன், அல்வாரிஸும் , 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். பித்துப் பிடித்து போன அல்வாரிஸ், அந்தப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்ல ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில், தன் குழந்தைகளைக் காக்க டார்ஸா ரென்டன் என்கிற பெண்மணி அவனை கொலை செய்கிறார். இரண்டாண்டுகள் உயிர் பிழைத்திருந்த 4 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளை 1917-ல், அந்த வழி வந்த அமெரிக்காவின் ஒரு கப்பல் காப்பாற்றியது. அன்று முதல், இன்று வரை மனித கால் தடம் பதியாமல், மர்ம பூமியாகத் திகழ்கிறது கிளிப்பர்டன் தீவு…
கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island) :
ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு. இந்தப் பகுதியில் 1800 களில் நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணிபுரிந்து வந்தனர். 1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது. மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர். ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா.

ராஸ் தீவு (Ross Island) :
அண்டார்டிக் பிரதேசத்தில் இருக்கும் ஒரு தீவு. 1841-ல் ஜேம்ஸ் ராஸ் என்ற பிரிட்டிஷ் ஊர்சுற்றி இந்த தீவைக் கண்டுபிடித்தார். அவரின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது. எரிபஸ், டெரர் என இரு எரிமலைகள் இங்கு உள்ளது. ராஸ் அமைத்த கூடாரங்கள் இன்னும் இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அடித்தளமிட்டது இந்த தீவு தான். 1979-ல் ஒரு மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத் தீவின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை யாருமே சென்றதில்லை.

அல்டாப்ரா தீவு (Aldabra Island) :
செஷல்ஸ் நாட்டின் தீவு. லட்சக்கணக்கான ஆமைகள் வசிக்கும் தீவு. 1888-ல் செஷல்ஸ் அரசாங்கம் இந்தத் தீவில் ஒரு கிராமத்தை உருவாக்கி மக்களை வாழச் செய்தனர். ஆனால், குடிநீர் ஆதாராமற்ற இந்தத் தீவில் மக்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை. இந்த வழி கப்பல்களில் போவோர் ஆமைகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆமைகளே அழியும் நிலை ஏற்பட்டது. ஆனால், 1950களுக்குப் பிறகு இந்த வழியில் போகும் கப்பல்கள் தீவை எட்ட பயப்படத் தொடங்கினர். காரணம் இன்றுவரைத் தெரியவில்லை. பல ஆண்டுகள் யாரும் அதன் அருகே போகவில்லை. இன்று ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்ட்ரோமா தீவு (Stroma Island) :

ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு. 1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை. ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார். ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை. வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள். மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின. இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது. ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு.
– இரா. கலைச் செல்வன்.

131
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: