உண்மைகளை சொல்ல… முகம் சிவந்து கோபத்தின் உச்சத்துக்கு போன பிரியங்கா… ‘நளினி’ பரபர தகவல்!

சென்னை: வேலூர் சிறையில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியங்கா காந்தி தம்மை சந்தித்த போது நடந்தது என்ன என்பது குறித்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தம்முடைய சுயசரிதை புத்தகத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற நூல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. நளினி அனுப்பிய தகவல்களை பத்திரிகையாளர் ஏகலைவன் தொகுத்துள்ளார்.
இந்த நூலில் பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதன் தொகுப்பு:

சாதாரண உறுப்பினர்…
பிரியங்கா காந்தியுடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 2-ம் கட்ட தலைவர் முருகன் என்பதை மறுத்து அதற்கான விளக்கங்களை கூறினேன். புலிகளின் 2-ம் கட்ட தலைவராக இருந்திருந்தால் முருகன் எளிதாக இலங்கைக்கு திரும்பியிருக்க முடியும். ஆனால் சிபிஐ, அவர் இலங்கைக்கு செல்ல படகு கிடைக்காமல் வேதாரண்யத்தில் இருந்து காத்திருந்துவிட்டு திரும்பினார் என்கிறது. அப்படியானால் அவர் ஒரு சாதாரண உறுப்பினராகத்தான் இருந்திருக்கிறார்.

பேருந்தில் வெடிகுண்டு?
சென்னை பாரிமுனையில் இருந்து வெடிகுண்டை கட்டிக் கொண்டு பேருந்தில் சென்றதாக சிபிஐ சொல்கிறது. பேருந்தில் நின்று கொண்டு செல்லும்போது வெடிகுண்டு வெடித்துவிடும் என்ற முன்யோசனை எதுவும் இல்லாமலா செல்வார்கள்?

எங்களுக்கு தெரியாது…
சதிச் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்கள் பதற்றத்துடன் இருந்திருப்போம்.. அன்றைய நாளில் என் அலுவலகத்தில் எனக்கு கூடுதலாக பணிநேரம் கொடுத்தனர். அதையும் கூட முடித்துக் கொடுத்துவிட்டுதான் வந்தேன்.

கடும்கோபத்தில் பிரியங்கா
இதையெல்லாம் பிரியங்கா காந்தி ஏற்றுக் கொண்டபோதும், ஒட்டுமொத்தமாக எல்லோருமே அப்பாவிகள் என்கிறீர்களா? நிரபராதிகள் என கூற வருகிறீர்களா? என முகம் சிவக்க கடுங்கோபத்துடன் கூறியபோது அதுதான் உண்மை என கூற முடியாமல் அமைதியாகிப் போனேன்.

ஏற்க முடியாத பிரியங்கா
ஏனெனில் சிபிஐ ஜோடிப்புகள், நீதிமன்ற தீர்ப்புகள் அப்படித்தான் இருந்தன… இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவரான தன்னுடைய தந்தையின் மரணத்துக்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவராகவே பிரியங்கா இருந்தார்.. ஆனால் அவர் மனதில் நான் நிரபராதி என்பது பதிவாகி இருந்தது.

இவ்வாறு நளினி விவரிக்கிறார்..
இந்த புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். இந்த புத்தகம் பெரும் பரபரப்பை கிளப்பக் கூடும் என தெரிகிறது.

348
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: